க்ரைம்

ரூ.100 கோடி கோகைன் பறிமுதல்: மும்பையில் 4 பேர் கைது

செய்திப்பிரிவு

மும்பை: மும்பையில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படவிருந்த ஒரு பார்சலில் இருந்து 200 கிராம் கோகைன் போதைப் பொருளை என்சிபி (போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு) கடந்த மாதம் கைப்பற்றியது.

இதையடுத்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் நவி மும்பையில் ரூ.100 கோடி மதிப்பிலான முதல் தர கோகைன், கஞ்சா, கனாபி ஆகிய போதைப் பொருட்களை என்சிபி கைப்பற்றியுள்ளது. மேலும் இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளது.

சமீபத்திய காலத்தில், இந்தியாவில் செயல்படும் சர்வதேச போதைப் பொருள் கும்பலுக்கு எதிரான ஒரு முக்கிய நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

இது தொடர்பாக என்சிபி அதிகாரிகள் கூறுகையில், “விசாரணையில், கடத்தல் கும்பல் வெளிநாட்டில் உள்ள ஒரு குழுவால் இயக்கப்படுவது தெரியவந்தது. அமெரிக்காவிலிருந்து பெறப்பட்டு, கூரியர் அல்லது சிறிய சரக்கு சேவை மற்றும் ஆட்கள் மூலம் இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள பலருக்கு அனுப்பப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் ஒருவருக்கொருவர் பெயர் தெரியாதவர்கள். போதைப்பொருள் கடத்தல் தொடர்பான அன்றாட உரையாடல்களுக்கு போலி பெயர்களை பயன்படுத்துகின்றனர்" என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் என்சிபியின் இந்த நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "போதைப் பொருள் கும்பல்களை முற்றிலும் சகித்துக் கொள்ளாமல் பாரதம் ஒடுக்கி வருகிறது. என்சிபியின் இந்த நடவடிக்கை, போதைப் பொருள் இல்லாத இந்தியா என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட உச்சி முதல் பாதம் வரையிலான விசாரணை அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றியாகும். இதற்காக என்சிபிக்கு எனது வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT