சென்னை: கோலம்போடும்போது பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவொற்றியூர் வசந்த் நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி (45).
அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். அதே தெருவில் தனலட்சுமியின் சகோதரி மகள் தமிழ்செல்வி(22) வசிக்கிறார். இவரும் திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணி செய்துவரும் காளிமுத்து (25) என்பவரும் 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர், இருவரும் தமிழ்செல்வியின் பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், மனைவியின் நடத்தையில் காளிமுத்து சந்தேகம் கொண்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் இருவரும் பிரிந்தனர். தமிழ்ச்செல்வி வழக்கம்போல் பெற்றோர் வீட்டில் இருந்தார். காளிமுத்து திருப்பூர் சென்றுவிட்டார்.
இந்நிலையில், கடந்த 5-ம் தேதி வீட்டுமுன் கோலம் போட்டுக் கொண்டிருந்த தனலட்சுமியை, காளிமுத்து கத்தியால் குத்தி கொலை செய்து தப்பினார். இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த காளிமுத்து கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இது ஒருபுறம் இருக்க, கொலை செய்தது ஏன் என போலீஸாரிடம் காளிமுத்து அளித்துள்ள வாக்குமூலத்தில், ``எனக்கும் மனைவிக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து நான் கோபித்துக் கொண்டு திருப்பூருக்கு சென்றுவிட்டேன். சில நாட்களில் மனைவியை சமாதானம் செய்து அவருடன் வாழ்ந்துவிடலாம் என எண்ணினேன். ஆனால், இதற்கு மனைவி தமிழ்ச்செல்வியின் சித்தி தனலட்சுமி தடையாக இருந்தார்.
இது தொடர்பாக அவரிடம் அடிக்கடி சென்று சமாதானம் பேசினேன். ஆனால், தனலட்சுமி என்னிடம் சண்டை போட்டார். எனவே, இவர் இருக்கும்வரை மனைவியுடன் நான் சேர்ந்து வாழ்வது நடக்காத விஷயம் எனக்கருதி, தனலட்சுமியை கொலை செய்தேன்'' என்று கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.