திருச்சி: மணப்பாறையில் தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளியை சூறையாடிய பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயிலும் 4-ம் வகுப்பு மாணவிக்கு, பள்ளி நிர்வாகியும், தாளாளர் சுதாவின் கணவருமான வசந்தகுமார் (54) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குச் சென்று, அங்கிருந்த வசந்தகுமாரைத் தாக்கினர்.
தகவலறிந்த மணப்பாறை போலீஸார் வசந்தகுமாரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையில், வசந்தகுமார் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் அதே கல்வி நிறுவனத்தின் மெட்ரிக் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பள்ளிக்குள் புகுந்து அலுவலக அறையின் கண்ணாடியை அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் அங்கிருந்த கார் கண்ணாடியையும் உடைத்து நொறுக்கியதுடன், காரை கவிழ்த்தனர்.
மேலும், பள்ளித் தாளாளர் உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தி, நொச்சிமேடு பகுதியில் திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் திருச்சி சரக டிஐஜி வருண்குமார், எஸ்.பி. செல்வ நாகரத்தினம் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, நள்ளிரவு 2 மணியளவில் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதற்கிடையில், பள்ளி நிர்வாகி வசந்தகுமார், தலைவர் மாராச்சி, தாளாளர் சுதா, துணை தாளாளர் இளஞ்செழியன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி, மணப்பாறை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதற்கிடையில், மெட்ரிக் பள்ளி மாவட்டக் கல்வி அலுவலர் பேபி தலைமையிலான அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல்காந்தி உள்ளிடோட்ர பள்ளிக்குச் சென்று பெற்றோர், மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், மேலும் ஒரு மாணவி பாலியல் தொந்தரவுக்கு உள்ளானது தெரியவந்தது. இது தொடர்பாகவும் மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து திருச்சி ஆட்சியர் மா.பிரதீப்குமார் கூறும்போது, "இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.