க்ரைம்

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் அறையின் சுவர் கடிகாரத்தில் ரகசிய கேமரா - வீடியோ வெளியாகி பரபரப்பு

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் அறையில் இருந்த சுவர் கடிகாரத்தில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவில் பதிவான வீடியோ இன்று சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரியில், காந்தி சாலையில் கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு ஆணையராக கிருஷ்ணமூர்த்தி பணியாற்றி வருகிறார். நகராட்சி தலைவராக பரிதா நவாப் இருக்கிறார். இவரது கணவர் நவாப், திமுக நகர செயலாளராக இருப்பவர். இந்நிலையில், ஆணையாளர் அறையில் கடந்த மாதம் 25-ம் தேதி சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன், நகர திமுக செயலாளர் நவாப் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும், அவர்களை ஆணையாளர் சமதானப்படுத்தும் வீடியோ காட்சிகள் இன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

புகார்: இதனிடையே, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள எனது அறையில் தமிழ் எண்ணுருக்களுடன் கூடிய சுவர் கடிகாரத்தில் (டிஜிட்டல் கடிகாரம்) ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா எந்த நபரால் பொருத்தப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஆணையாளர் விளக்கம்: இது குறித்து ஆணையாளர் கூறும்போது, ‘நான் விடுப்பில் சென்றிருந்தேன். கடந்த 29-ம் தேதி எனது அறைக்குள், நகராட்சி ஊழியர்கள் நுழையும் போது, அங்கிருந்த டிஜிட்டல் கடிகாரத்தில் பீப் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து ஊழியர்கள் கடிகாரத்தை கழற்றி பார்த்தபோது உள்ளே ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரிந்தது.

கடிகாரத்தில் இருந்த கேமரா, சிப் எடுக்கப்பட்ட நிலையில், சுகாதார ஆய்வாளர், திமுக நகர செயலாளர் இடையே ஏற்பட்ட வாக்குவாத காட்சிகள் மட்டும் வெளியானது எப்படி என தெரியவில்லை. மேலும், நகராட்சியில் 4 இடங்களில் டிஜிட்டல் கடிகாரம் உள்ளது. மற்ற இடங்களில் வைக்கப்படாத ரகசிய கேமரா எனது அறையில் வைக்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை. இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி, தொடர்புடையவர்கள் அனைவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

வாக்குவாதத்துக்கான காரணம்: கடந்த மாதம் 25-ம் தேதி திமுக, அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அதிமுக பொதுக்கூட்டம் இடத்தில் சுகாதார பணிகள் மேற்கொண்ட ஊழியர்கள், திமுக பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் செய்யவில்லை என சுகாதார ஆய்வாளர், திமுக நகர செயலாளர் இடையே ஆணையாளர் அறையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தான், நகராட்சி அலுவலகம் முன்பு, நவாப்பை கண்டித்து, அரசு ஊழியர்களும், சுகாதார ஆய்வாளரை கண்டித்து தற்காலிக டெங்கு தடுப்பு பணியாளர்களும் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT