சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தாய்லாந்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு நேற்று விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது வந்த 30 வயதுடைய ஆண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று விட்டு வந்த அவரது உடைமைகளை மோப்ப நாய் உதவியுடன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 3 பார்சல்களில் ரூ.7 கோடி மதிப்புள்ள 6.9 கிலோ எடை கொண்ட பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
தப்பி சென்ற நபருக்கு வலை: இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, கஞ்சாவை கொண்டு வருவதற்காக, தாய்லாந்துக்கு அனுப்பி வைத்த நபர், சென்னை விமான நிலையம் வந்து கஞ்சாவை பெற்று கொண்டு பணம் கொடுப்பதாக தெரிவித்தார் என்றார். பயணி சிக்கிய நிலையில், விமான நிலையத்தில் இருந்து தப்பி சென்ற நபரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.