கரூரில்: கரூர் வெங்கமேடு சின்னகுளத்துபாளையம் பகுதியில் ஜன. 30-ம் தேதி காரில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை கடத்திய 3 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 168 கிலோ புகையிலைப் பொருட்கள், ரூ.1.25 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், பறிமுதல் செய்த ரூ.1.25 லட்சத்தை கணக்கில் காட்டாமல் போலீஸார் மறைத்துவிட்டதாக புகார் எழுந்தது. இதில் தொடர்புடைய கரூர் நகர காவல் ஆய்வாளரும், வெங்கமேடு காவல் ஆய்வாளருமான மணிவண்ணன், உதவி ஆய்வாளர்கள் உதயகுமார் (தாந்தோணிமலை), சித்ரா தேவி (வெங்கமேடு), சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார், வெங்கமேடு தனிப் பிரிவு காவலர் ரகுநாத், கரூர் நகர காவலர்கள் விக்னேஷ், ஆர்.தம்பிதுரை உள்ளிட்ட 8 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். வெங்கமேடு ஆய்வாளராக இருந்த செந்தூரபாண்டி, பெண்ணிடம் ஆபாசமாகப் பேசியதாக எழுந்த புகாரில் ஏற்கெனவே காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.