க்ரைம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்!

எஸ். நீலவண்ணன்

இணைய வழியில் பல்வேறு மோசடிகள் அரங்கேற, அவற்றை சைபர் க்ரைம் போலீஸார் கண்காணித்து தடுத்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கும் இந்த இணைய வழி குற்றங்கள் குறித்து, சைபர் க்ரைம் போலீஸாரிடம் கேட்டபோது அவர்கள் அளித்த விவரங்கள்: இணைய வழியில் பல்வேறு விதமாக மோசடிகள் நடக்கின்றன. ‘ஆன்லைன் ஆப் மூலம் வேலை உள்ளது.

இதில் உங்களுக்கு இரு மடங்காக வருவாய் கிடைக்கும். ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால் கூடுதல் தொகை கிடைக்கும், கிரிப்டோ கரன்ஸி வாங்குங்கள், இந்த டாஸ்க்கை முடித்தால் ஏகப்பட்ட பணம், பிட் காயினில் அருமையான வருமானம்’ என்று பலவாறாக இணைய வழி மோசடி அழைப்புகள் வருகின்றன. நாங்கள் ஏற்கெனவே பலமுறை கூறி வருகிறபடி இந்த அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். உங்களது வங்கிக் கணக்கு எண், அதன் ரகசிய எண் ஆகியவற்றை யாரிடமும் தெரிவிக்க கூடாது. பிட் காயின், கிரிப்டோ கரன்ஸி போன்றவை இந்தியாவில் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வர்த்தகம் அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

சமூக வலைதளங்களில் வலம்வரும் கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்களில் சற்று வசதியாக உள்ளவர்களின் விவரங்களை ‘ஹேக்கர்ஸ்’ சேகரிக்கின்றனர். அவர்களை எப்படி தொடர்பு கொள்வது என்று மிகவும் நுணுக்கமாக அறிந்து கொண்டு ஆசைவார்த்தை காட்டி மோசடி செய்கிறார்கள்.

கடந்த 2021-ம் ஆண்டு ரூ.1 கோடியே 49 லட்சத்து 30 ஆயிரத்து 916 அளவுக்கு மோசடி செய்யப் பட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில், ரூ.21 லட்சத்து 26 ஆயிரத்து 305 முடக்கப்பட்டது. இவற்றில் ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்து 813 மீட்கப்பட்டு புகார் தாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு ரூ. 2 கோடியே 33 லட்சத்து 87 ஆயிரத்து 661 மோசடி செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில், ரூ.1 கோடியே 46 லட்சத்து 68 ஆயிரத்து 38 பணம் முடக்கப்பட்டது. இதில், ரூ. 20 லட்சத்து 6 ஆயிரத்து 13 மீட்கப்பட்டு புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டில் ரூ. 3 கோடியே 74 லட்சத்து 93 ஆயிரம் மோசடி செய்யப்பட்டதாக புகார் பெறப்பட்டது. தொடர் விசாரணையில் புகாரில் குறிப்பிட்ட பண அளவைத் தாண்டி ரூ. 4 கோடியே 82 லட்சத்து 30 ஆயிரம் முடக்கப்பட்டது. இதில், ரூ.18 லட்சத்து 3 ஆயிரத்து 22 மீட்கப்பட்டு புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர். கடந்த 2024-ம் ஆண்டு நிலவரம் குறித்து சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியாவிடம் கேட்டபோது, “சைபர் க்ரைம் ஏடிஜிபி சந்திப் மிட்டல் மேற்பார்வையில், விழுப்புரம் ஏடிஎஸ்பி தினகரன் அறிவுறுத்தலின்படி கடந்தாண்டு மட்டும் 93 புகார்கள் பதிவு செய்யப்பட்டது.

இப்புகாரின் மூலம் ரூ.10 கோடியே 96 லட்சத்து 89 ஆயிரத்து 779 பணத்தை புகார்தாரர்கள் இழந் துள்ளனர். இத்தொகையில் ரூ.10 கோடியே 50 லட்சத்து 55 ஆயிரத்து 575 அளவிலான தொகை முடக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையின் வடக்கு சரகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.1 கோடியே 25 லட்சத்து 13 ஆயிரத்து 491 பணம் மீட்கப்பட்டு உரியவர் களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கம்போடியா, தாய்லாந்துக்கு தப்பிச் சென்ற 3 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

கடந்த 2023-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகமான தொகை அதிகரித்து வருவதை புள்ளி விவரங்கள் மூலம் அறிய முடிகிறது. இந்த புள்ளி விவரம் விழுப்புரம் மாவட்டத்துக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT