க்ரைம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கோரி நீதிமன்றத்தில் முறையீடு

செய்திப்பிரிவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலையில் ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஏற்கெனவே வேறு வழக்குகளில் கைதாகி வேலூர் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரன் மீதும் குற்றம் சாட்டப்பட்டு, அவர் இந்த வழக்கில் முதல் எதிரியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நாகேந்திரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹமீது இஸ்மாயில், ‘‘நாகேந்திரனுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை தற்போது மேலும் மோசமாகியுள்ளதால் அவருக்கு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க அனுமதி வழங்க வேண்டும். இதுதொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்" என முறையிட்டார்.

அவசர வழக்காக ஏற்க முடியாது: அப்போது நீதிபதிகள், ‘‘நாகேந்திரனுக்கு தற்போது வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் இந்த மனுவை அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க முடியாது என்றும், வழக்கு பட்டியலிடப்பட்டால் இன்று (பிப்.4) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்" எனவும் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT