கம்ரூல் ஆலம் 
க்ரைம்

கணவன் - மனைவியை கொலை செய்துவிட்டு மாறு வேடத்தில் டெல்லியில் பதுங்கியிருந்த கொலையாளி கைது

செய்திப்பிரிவு

சென்னை: நகை, பணத்துக்காக கணவன் - மனைவியை கொலை செய்துவிட்டு கைதாகி, ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாகி டெல்லியில் மாறு வேடத்தில் பதுங்கியிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை துரைப்பாக்கத்தில் வசித்தவர் மாயாண்டி (62). இவரது மனைவி வள்ளிநாயகி (60). இவர்கள் இருவரும் கடந்த 2018 ஏப்ரல் 17-ம் தேதி வீட்டிலேயே கொலை செய்யப்பட்டனர். வீட்டிலிருந்த 12 பவுன் தங்க நகைகள், ரொக்கப் பணம் திருடுபோனது. இக்கொலை தொடர்பாக துரைப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், நகை பணத்துக்காக இரட்டை கொலை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.

இதைச் செய்தது மாயாண்டி வீட்டில் டைல்ஸ் வேலை செய்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த கம்ரூல் ஆலம்(38) என்பது தெரிந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இக்கொலை வழக்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அப்போது, நீதிமன்ற பிணையில் சிறையிலிருந்து வெளியே வந்த கம்ரூல் ஆலம், விசாரணைக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து, அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த 01.10.2021 அன்று பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து துரைப்பாக்கம் காவல் நிலைய போலீஸார் மற்றும் அதிதீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், டெல்லியில் பதுங்கியிருந்த கம்ரூல் ஆலத்தை போலீஸார் அங்கு வைத்து கடந்த 31-ம் தேதி கைது செய்தனர். பின்னர், அவரை நேற்று சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

இவர் கடந்த 4 ஆண்டுகளாக போலி முகவரி மற்றும் மாறு வேடத்தில் டெல்லியில் மனைவி, குழந்தைகளுடன் குடும்பமாக வசித்து வந்துள்ளார். இதையறிந்த சென்னை போலீஸார் அங்கு சென்று கம்ரூல் ஆலத்தை சுற்றி வளைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT