ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே சிப்காட் காவல் நிலையம் மற்றும் அரிசி கடையின் மீது நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச்சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணையில் ஒருவரை போலீஸார் சுட்டுப்பிடித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. பெங்களூரு -சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள இந்த காவல் நிலையம் வளாகத்துக்குள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முகமூடிஅணிந்தபடி 2 மர்ம நபர்கள் வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர், அவர்கள் யார் என விசாரித்துள்ளார். ஆனால், அதற்கு பதில் கூறாமல் மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த 2 பெட்ரோல் குண்டுகளை எடுத்து, வரவேற்பாளர் இடம் மற்றும் பார்வையாளர்கள் அமரும் இடங்களில் வீசி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
சத்தம் கேட்டு வந்த சக போலீஸார் அங்கு வந்து தண்ணீரை ஊற்றி தீயை உடனடியாக அணைத்தனர். அதற்கு முன்னதாக சிப்காட்டில் உள்ள அரிசிகடையின் மீதும் இதே நபர்கள்பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். தகவல் அறிந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா சிப்காட் காவல்நிலையத்துக்கு வந்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா உத்தரவின்படி 7 தனிப்படைகள் அமைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும், சந்தேகத்தின் பேரில் 14 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையே, ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையில், சிப்காட் உதவி காவல் ஆய்வாளர் முத்தீஸ்வரன் மற்றும் போலீஸார் சென்னை பல்லாவரத்தில் இந்த வழக்கில் தொடர்புடையதாக சிப்காட் பகுதியைச் சேர்ந்த ஹரி (18)
என்பவரை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர். அங்கி ருந்து அவரை வேன் மூலமாக ராணிப்பேட்டைக்கு அழைத்து வந்தனர். அப்போது, காவேரிப்பாக்கம் அடுத்த வாணியன் சத் திரம் காட்டேரி அருகே வந்து கொண்டிருந்தபோது, ஹரி இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பின்னர் வேனில் இருந்து இறங்கிய ஹரி, அருகில் இருந்த உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனின் இடது முழங்கையில் கத்தியால் வெட்டி விட்டு தப்பியோட முயற்சி செய்துள்ளார். உடனடியாக ஆய்வாளர் சசிகுமார் தனது கைத்துப்பாக்கியை எடுத்து ஹரியை நோக்கி சுட்டார். இதில், ஹரியின் இடது கால் முட்டியில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தார். உடனடியாக ஹரி மற்றும் கத்தியால் வெட்டு காயமடைந்த உதவிஆய்வாளர் முத்தீஸ்வரன் ஆகியஇருவரையும் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித் தனர் . அங்கு இருவருக்கும் மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். இங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குண்டு அடிபட்ட ஹரி வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ குழுவினர் பரிந்துரையின் பெயரில் நேற்று இரவு 7.15 மணிக்குஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘சிப்காட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சரித்திர பதிவேடு பட்டியலில்உள்ள குற்றவாளி ஒருவர் அப்பகுதியில் கடைக்காரர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இதற்கு,அவருடைய கூட்டாளி களை பயன்படுத்தியுள்ளார். இந்தக் கூட்டாளிகள் பெரும்பாலானவர்கள் 18 வயது முழுமை பெறாதவர்களாக உள்ளனர். இவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அது பெரிதாக எடுபடாது என அறிந்து இது போன்ற செயல்களில் அந்த பிரபல ரவுடி ஈடுபட்டுவந்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற பணம் பறிப்பு வழக்கு ஒன்றில் தொடர்பாக ரவுடியின் கூட்டாளிகளை சிப்காட் போலீஸார் கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகள் எங்களையே கைது செய்கிறீர்களா? என காவல் நிலையம் மற்றும் எங்களுக்கு தகவல் கொடுத்த ஒருவரின் கடை மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசி சென்றார்களா? என சந்தேகம் எழுந்துள்ளது’’ என்றனர்.
மாவட்ட காவல்துறை விளக்கம்: இதுதொடர்பாக மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தனது தந்தை, தனது மீதும், கூட்டாளிகள் மீதும் வழக்குப்பதிவு செய்ததற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாக பிடிபட்டவரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் தொடர்புடையவர்களை தேடி வருகிறோம்’’ என கூறப்பட்டுள்ளது.