க்ரைம்

சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் கைதான 2 சிறப்பு எஸ்ஐ-கள் மீது மேலும் ஒரு வழக்கு

செய்திப்பிரிவு

சென்னை: வாலாஜா சாலையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான 2 சிறப்பு எஸ்ஐக்கள் உட்பட 7 பேர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு எஸ்ஐ சன்னி லாய்டு வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது கவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் பணத்தை மிரட்டி பறித்த வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ-யாக பணியாற்றிய ராஜாசிங், வருமானவரித் துறை அதிகாரி தாமோதரன், ஊழியர்கள் பிரதீப், பிரபு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இந்த வழிப்பறி வழக்கில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் சிறப்பு எஸ்ஐ-யாக பணியாற்றிய சன்னி லாயிடுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவாகி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் பதுங்கியிருந்த அவரை திருவல்லிக்கேணி தனிப்படை போலீஸார் கடந்த 15-ம் தேதி கைது செய்து சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். அவர் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் சன்னி லாயிடுவை 4 நாள் காவலில் எடுத்து திருவல்லிக்கேணி போலீஸார் விசாரித்தனர். மேலும், அவரது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றும் விசாரித்தனர். சோதனையில் சென்னை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கியது, பிரம்மாண்ட வீடுகள் கட்டியதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

உடற்பயிற்சி கூடம் மூலம் வந்த வருமானத்திலும், ஆசிரியையான தனது மனைவி வங்கியில் கடன் வாங்கியும் இந்த சொத்துக்களை வாங்கியதாகவும் சன்னி லாய்டு போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும், சன்னி லாய்டுவும் ராஜா சிங்கும் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து, அண்ணா சாலையில், கடந்த ஆண்டு தமீம் அன்சாரி என்பவரிடம் இருந்து ரூ.40 லட்சத்தை பறிமுதல் செய்து, ரூ.20 லட்சம் பணத்தை மட்டும் கணக்கில் காட்டிவிட்டு, மீதமுள்ள ரூ.20 லட்சத்தை பங்கு போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இவர்கள் உட்பட 7 பேர் மீது ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் வேறு யாரிடமாவது வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT