க்ரைம்

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: சென்னையில் போக்குவரத்து காவலர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு ஆண் நண்பரைப் பார்க்க சென்ற 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலரை போலீஸார் கைது செய்தனர்.

பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது 14 வயது மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 24ம் தேதி சிறுமியைக் காணவில்லை என்று, சிறுமியின் பெற்றோர் ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர்.

அதில், சிறுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டதும், அடிக்கடி இருவரும் பட்டினப்பாக்கம் கடற்கரையில் சந்தித்துள்ளதும். மேலும், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கடலூரில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார், கடலூர் சென்று இருவரையும் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, சிறுமியுடன் தனது மகனை, தாயாரே அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனின் தாயை கைது செய்த போலீஸார், சிறுவனை சீர்நோக்கு பள்ளியிலும், சிறுமியை காப்பகத்திலும் சேர்த்தனர். இந்நிலையில், சிறுமியிடம் குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் நடத்திய விசாரணையில், சிறுமி அதிர்ச்சி வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ”சிறுமி அவருடைய ஆண் நண்பரைப் பார்க்க பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு செல்லும் போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ராமன், சிறுமியை மிரட்டி, கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுக்கு பின்புறம் அழைத்து சென்றும், போலீஸ் பூத் மற்றும் போலீஸ் ஜீப்பில் வைத்தும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து, சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு ஓட்டுநராகப் பணியாற்றி வரும் போக்குவரத்து காவலர் ராமன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” என்றனர்.

SCROLL FOR NEXT