சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் காரில் பெண்களை துரத்திய விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மேலும் ஒரு கல்லூரி மாணவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கானாத்தூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், கடந்த 25ம் தேதி அதிகாலை தனது தோழிகளுடன் கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். முட்டுக்காடு பக்கிங்ஹாம் கால்வாயை தாண்டி செல்லும் போது, 2 சொகுசு கார்களில் வந்த இளைஞர்கள் பின் தொடர்ந்து வந்து, இளம் பெண்களை துரத்திச் சென்று மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக கானாத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய கல்லூரி மாணவர்கள் 4 பேரை ஏற்கெனவே கைது செய்தனர். அவர்கள் 4 பேரும் பிப்.14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான சந்துரு என்ற கல்லூரி மாணவர் தலைமறைவாகினார். அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.