கோவை: கோவையில் கஞ்சா விற்றதாக மகன் கைது செய்யப்பட்டார். பொய் வழக்கில் கைது செய்ததாகக் கூறி, காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை கவுண்டம்பாளையம் காவல் நிலையத்துக்கு நேற்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், தனது மகன் மீது போலீஸார் பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர் என்று கூச்சலிட்டவாறு, தான் கொண்டு வந்த கேனில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டார். அதிர்ச்சியடைந்த போலீஸார் தீயை அணைத்து, ஆம்புலன்ஸ் மூலம் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றவர் கவுண்டம்பாளையம் சிவா நகர் மெய்கண்டர் வீதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சேகர் என்பதும், அவரது மகன் மணிபாரத் (19) என்பவரை கஞ்சா விற்பனை செய்ததாக போலீஸார் கைது செய்திருந்ததும் தெரியவந்தது. தனது மகனை போலீஸார் பொய் வழக்கில் கைது செய்ததாகக் கூறி வந்த சேகர், காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.