க்ரைம்

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் கைதான எஸ்ஐ-யை சொந்த ஊருக்கு அழைத்து சென்று விசாரணை: மேலும் 3 பேருக்கு தொடர்பு

செய்திப்பிரிவு

சென்னை: ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் கைதான போலீஸ் எஸ்ஐயை அவரது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று தனிப்படை போலீஸார் விசாரித்துள்ளனர். இவ்வழப்பறிக்கு மேலும் 3 பேர் உதவி செய்துள்ள தகவல் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. அவர்களிடமும் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது கவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் பணத்தை மிரட்டி பறித்த வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ-யாக பணியாற்றிய ராஜா சிங் (48), வருமான வரித்துறை அதிகாரி தாமோதரன் (42), ஊழியர்கள் பிரதீப் (41), பிரபு (41) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் இந்த வழிப்பறி வழக்கில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் சிறப்பு எஸ்ஐ-யாக பணியாற்றிய சன்னி லாயிட்டுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாகி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் பதுங்கியிருந்த அவரை திருவல்லிக்கேணி தனிப்படை போலீஸார் கடந்த 15-ம் தேதி கைது செய்து சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். அவர் மீது பணியிடை நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் சன்னி லாயிடுவை 4 நாள் காவலில் எடுத்து திருவல்லிக்கேணி போலீஸார் விசாரித்து வருகின்றனர். விடிய விடிய அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், பல்வேறு தகவல்கள் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன. விசாரணையின் ஒரு பகுதியாக எஸ்ஐ சன்னி லாய்டுவை அவரது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றும் விசாரித்துள்ளனர். அங்கிருந்தும் சில ஆவணங்கள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதோடு, வழிப்பறி வழக்கில் கூரியர் நிறுவனத்தைச் சேர்ந்த 2 பேர் மற்றும் வணிகவரித் துறை ஓட்டுநர் ஒருவர் என மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பதை தனிப்படை போலீஸார் உறுதி செய்துள்ளனர். அவர்களை கைது செய்து விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT