க்ரைம்

சென்னை | சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்த இளம்பெண் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை

செய்திப்பிரிவு

சென்னை: சரித்திரப் பதிவேடு குற்றவாளியின் தலையில் கிரைண்டர் கல்லைப் போட்டு கொலை செய்த இளம்பெண் மற்றும் அவரது தம்பி உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை ஐசிஎப் கக்கன்ஜி நகரைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இமானுவேல்(24), கடந்த 2013-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள குடிசை வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்றுக்கொடுக்க பணம் வசூலித்துள்ளார். இதை அம்மு என்ற உமாமகேஸ்வரி (25) தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் அம்முவை ஆபாசமாகத் திட்டிய இமானுவேல், அவரிடம் தகாத முறையில் நடக்க முற்பட்டுள்ளார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடந்த 2013 ஏப்.15 அன்று தனது தாயாருடன் பேசிக்கொண்டிருந்த இமானுவேலை, அம்மு, அவரது தம்பி அப்பு என்ற தளபதி மற்றும் தம்பியின் நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் வெட்டியும், கிரைண்டர் கல்லை தலையில் போட்டும் கொலை செய்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவன் உட்பட அம்மு(25), அப்பு(23), ரஞ்சித்(23, வினோத்(23), காட்டுராஜா(22), செல்வா(23), இளையா(23), அப்பன்ராஜ்(23) ஆகிய 9 பேரை ஐசிஎப் போலீஸார் கடந்த 2013-ம் ஆண்டு கைது செய்தனர். இதில் சிறுவனுக்கு எதிரான வழக்கு சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

மற்ற 8 பேருக்கு எதிரான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள 18-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி எஸ்.உமாமகேஸ்வரி முன்பாக நடந்து வந்தது. அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஜெய்சங்கர் ஆஜராகி வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ``குற்றம்சாட்டப்பட்ட அனைவர் மீதான குற்றச்சாட்டுகளும் அரசுத் தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அம்மு உட்பட 8 பேருக்கும் ஆயுள் தண்டனையுடன் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கிறேன். இமானுவேலை இழந்த அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT