க்ரைம்

சென்னை | பெண் காவல் ஆய்வாளரிடம் கூடுதல் கட்டணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: பெண் காவல் ஆய்வாளரிடம் செயலி காட்டிய கட்டணத்தை விட ரூ.20 அதிகம் கேட்டு தகராறில் ஈடுபட்ட ஆட்டோ ஒட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை முகப்பேர் மேற்கு, 6-வது பிரதான சாலையை சேர்ந்தவர் சுமதி. சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு, கோயம்பேடு பி சாலையிலிருந்து மொபைல் செயலி வாயிலாக ஆட்டோ புக் செய்தார். அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர், சாதாரண உடையில் இருந்த பெண் ஆய்வாளர் சுமதியிடம், செயலியில் காட்டும் கட்டணத்தை விட ரூ.20 அதிகம் தர வலியுறுத்தியுள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, ஆட்டோவில் இருந்து இறங்கிவிடுங்கள் என ஆட்டோ ஓட்டுநர் சுமதியிடம் கூறியுள்ளார். இதையடுத்து, ஆய்வாளர் ஆட்டோவில் இருந்து இறங்க முற்பட்டபோது, வேகமாக ஆட்டோவை இயக்கவே, அவர் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து சுமதி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற கோயம்பேடு போலீஸார், ஆட்டோ ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

காயமடைந்த ஆய்வாளர் சுமதி அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதையடுத்து, பெண் ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்டு, காயம் ஏற்படும் வகையில் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரான பாடியை சேர்ந்த மணிகண்டனை (37) போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT