இணையவழி குற்றங்களை செய்வதற்காக இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் சட்டவிரோத ஆள்சேர்ப்பு முகவர்கள் 5 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக கோவை சரக சிபிசிஐடி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பல்வேறு மாநிலங்களில் இருந்து, வெளிநாட்டில் வேலை தேடும் இளைஞர்களை, சட்டவிரோத ஆள்சேர்ப்பு நிறுவனத்தினர் மற்றும் முகவர்கள் கம்போடியா, லாவோஸ், மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் அனுப்பிவைக்கின்றனர்.
அங்கு அவர்கள் இணையவழி குற்றங்களில் (சைபர் க்ரைம்) ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர். போலியான சமூக ஊடகங்கள் மூலமாக மக்களைத் தொடர்புகொண்டு ஆன்லைன் விளையாட்டு, பிட்காயின் மோசடி போன்ற போலியான செயலிகளில் முதலீடு செய்யவைத்து, மோசடியில் ஈடுபட வைக்கின்றனர். மோசடி செய்ய ஒத்துழைக்க மறுத்தால், உடல் அளவிலும், மனதளவிலும் துன்புறுத்துகின்றனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சட்டவிரோத ஆள்சேர்ப்பு முகவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது. கோவை சரகத்தில் 3 வழக்குகள் உட்பட மாநிலம் முழுவதும் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கோவை சிபிசிஐடி சரகத்தில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, சென்னையைச் சேர்ந்த பியோ லியோராஜ், முகமது ஷேக் மீரான், சிவகங்கை கவுதம், திருப்பூர் தாமோதரன், விருதுநகர் ராஜேஷ் என்ற ராஜதுரை ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஐவரும் 18-க்கும் மேற்பட்டோரை தமிழகத்தில் இருந்து லாவோஸ், கம்போடியா போன்ற நாடுகளுக்கு இணையவழி குற்றம் புரிய சட்டவிரோதமாக அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுவரை சைபர் க்ரைம் தொடர்பான 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாவோஸ், கம்போடியா நாடுகளுக்குச் செல்லவிருந்த 28 பேரிடம் இதுகுறித்து விளக்கியதையடுத்து, அவர்கள் அந்நாடுகளுக்கு செல்வதைக் கைவிட்டுள்ளனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 16 பேர் மியான்மர், கம்போடியா, லாவோஸ் நாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.