விழுப்புரம்: சென்னையில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.60 கோடியை விழுப்புரம் போலீஸார் பறிமுதல் செய்தனர். பணத்தை எடுத்துச் சென்ற 4 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இன்று (ஜன.30) பிற்பகல் தாலுகா காவல் நிலைய போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது சென்னையிலிருந்து வந்த பேருந்தில் இறங்கிய 4 பேர் மீது சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் கட்டுகட்டாக பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனை தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், திருச்சி வரகநேரி பகுதியைச் சேர்ந்த தாஜ்முகமது (35), முகமதுரியாஸ் (30), சிரஜ்தீன் (31), அபுபக்கர் சித்திக் (31) என்பது தெரிய வந்தது. மேலும் ஒவ்வொருவரிடமும் தலா ரூ.40 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்துக்கான ஆவணங்கள் ஏதம் இல்லாததும், முறையாக பதில் கூறாததால் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அந்த பணத்தை சென்னையிலிருந்து திருச்சிக்கு கொண்டு சென்றதும், விழுப்புரத்தில் இறங்கி பேருந்து மாறிய போது போலீஸில் சிக்கிக் கொண்டதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்த போலீஸார் பணத்தை பறிமுதல் செய்து வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து பிடிபட்டது ஹவாலா பணமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.