கூடலூர்: கூடலூரில் வேட்டைக்கு சென்றபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு நாட்டு துப்பாக்கி சப்ளை செய்தவர் கைது செய்யப்பட்டுளளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர் சோலைப் பகுதியில் கடந்த 25-ம் தேதி இரவு நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற ஜம்ஷிர்(37) உயிரிழந்தார். காட்டு யானை தாக்கி ஜம்ஷிர் உயிரிழந்ததாக அவருடன் சென்ற நண்பர்கள் ஜம்ஷிரின் உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து வனத் துறையினர் ஜம்ஷிர் இறந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, யானை தாக்கியதற்கான எந்த அறிகுறியும் இல்லை என போலீஸாரிடம் தெரிவித்தனர்.
அதன் பின்பு இந்தச் சம்பவம் தொடர்பாக தேவர் சோலை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், 25-ம் தேதி நண்பர்களுடன் ஜம்ஷிர் வேட்டையாடச் சென்றதும், அப்போது மானை சுட்டபோது எதிர்பாராத விதமாக ஜம்ஷிர் மீது குண்டுகள் பாய்ந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து இச்சம்பவத்தில், வேட்டைக்குச் சென்ற நவ்சாத், ஜாபர் அலி, ஐதர் அலி, சதீஷ் அவர்களுக்கு உதவிய, ரபிக், உஸ்மான், ஜினேத், அன்வர், ஜெம்ஷித், சபீக், ஜெஷிம், அன்ஷாத், சாதிக் அலி என 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், இச்சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட நாட்டு துப்பாக்கிகள், வெடிப்பொருட்கள்,தொடர்பாக கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இவர்களுக்கு நாட்டு துப்பாக்கிகளை சப்ளை செய்த தேவர் சோலை 3 டிவிசன் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (58) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்து வரும் போலீஸார், இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என விசாரணையை தீவிரபடுத்தி உள்ளனர். வேட்டையாடச் சென்ற இடத்தில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவர் என 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.