க்ரைம்

சென்னை | ஐ.எஸ் இயக்​கத்​துக்கு ஆள் சேர்த்​ததாக கைதான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிறை​யில் அடைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், 10 மாதங்களாக, ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆட்களை திரட்டிய தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் சித்தாந்தத்தை ஊக்குவிப்பவர்கள், அந்த அமைப்புக்கு ஆட்களைச் சேர்ப்பவர்களை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகிறது. இந்நிலையில், தடை செய்யப்பட்ட இந்த இயக்கத்துக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிலர் ரகசியமாக ஆட்களை (இளைஞர்கள், மாணவர்கள் உட்பட) திரட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக தீவிரவாத சித்தாந்தத்தில் உடன்பாடு உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஒருங்கிணைத்து, அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. இதையறிந்த என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் சென்னை, மயிலாடுதுறையில் 20 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

குறிப்பாக சென்னை புரசைவாக்கம் அழகப்பா சாலையில் இயங்கி வரும் தனியார் ஆம்புலன்ஸ் சர்வீஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அங்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணி செய்து வந்த மயிலாடுதுறை மாவட்டம், திருமுல்லைவாசல் பகுதியைச் சேர்ந்த அல்பாசித்(26) என்பவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

அவரது தொடர்பில் இருந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த 15 பேரின் வீடுகளிலும் என்ஐஏ சோதனை நடத்தியதோடு முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், 15 பேரையும் வரும் 31-ம் தேதி சென்னையில் உள்ள தங்கள் அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் கொடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அல்பாசித்தை என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவோடு இரவாக பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அடுத்த மாதம் 10-ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுஒருபுறம் இருக்க சிறையில் அடைக்கப்பட்ட அல்பாசித், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏற்கெனவே என்ஐஏவால் கைது செய்யப்பட்ட இக்மா சாதிக்குடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்தியா முழுவதும் மத்திய உளவு அமைப்பால் தேடப்பட்டு வருபவர்களின் பட்டியலில் ஒருவராக இக்மா சாதிக் இருந்ததாக கூறப்படுகிறது.

இவர் மூலமாகவே அல்பாசித் ஐ.எஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளராக மாறியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அல்பாசித் கடந்த 10 மாதங்களாக ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்து வந்துள்ளதாகவும், அவரது பின்னணி குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT