க்ரைம்

இளைஞர் கொலை: குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது

செய்திப்பிரிவு

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா (எ) தமிழரசன் (23). அதே பகுதியைச் சேர்ந்தவர் விஜய் கணபதி (22). இருவரும் கடந்த 16-ம் தேதி திருமால்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நின்றிருந்தனர். அப்போது, அங்கு வந்த திருமால்பூர் பிரேம்குமார் (24) என்பவர், முன்விரோதம் காரணமாக, தமிழரசன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றார். இதில் தமிழரசனைக் காப்பாற்ற முயன்ற விஜயகணபதிக்கும் காயம் ஏற்பட்டது.

பலத்த காயமடைந்த இருவரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 22-ம் தேதி தமிழரசன் உயிரிழந்தார். இதுகுறித்து நெமிலி போலீஸார் வழக்கு பதிவு செய்து, திருமால்பூரைச் சேர்ந்த பிரேம் குமார் (24), வெங்கடேசன் (23), மணிகண்டன் (24), நவீன் (22), கீழ்வெண்பாக்கம் சதீஷ் குமார் (24) ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில், எஸ்.பி. பரிந்துரையின் பேரில் 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு ராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT