ஶ்ரீவில்லிபுத்தூர்: ரீல்ஸ் எடுப்பதாக கூறி சிறுவர்களை அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்து வீடியோ எடுத்த இரு பெண்கள் உட்பட யூடியூப் பிரபலங்கள் 4 பேரை போக்சோ வழக்கு பதிவு செய்து ஶ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
ஈரோட்டை சேர்ந்தவர் கீழக்கரை (எ) கார்த்திக் (30). யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர். இவர் தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா (36) என்பவருடன் ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதற்காக ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளத்தில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு நவம்பர் மாதம் வந்தார். அங்கு திவ்யா இரு சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கார்த்திக் கடந்த வாரம் விருதுநகர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கடலூரை சேர்ந்த யூடியூப் பிரபலம் சித்ரா (48), சென்னை டிஜிபி அலுவலகத்தில் திவ்யா குழந்தைகளை அடைத்து வைத்து பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்து, அதுகுறித்த வீடியோ உள்ளதாக பேட்டி அளித்தார். இதுதொடர்பாக ஶ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸார் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி,
ஏ.டி.எஸ்.பி சூரியமூர்த்தி, டி.எஸ்.பி ராஜா, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில், 15 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு திவ்யா பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி அளித்த புகாரில் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸார் திவ்யா, கார்த்திக், சித்ரா, ஆனந்தராமன் ஆகிய 4 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில்: “ஈரோட்டை சேர்ந்த கீழக்கரை என்ற கார்த்திக், டிக்டாக் பிரபலம் திவ்யா என்பவருடன் சேர்ந்து வீடியோ எடுப்பதற்காக ஶ்ரீவில்லிபுத்தூருக்கு கடந்த நவம்பர் மாதம் வந்துள்ளார். அங்கு அதே பகுதியை சேர்ந்த 15 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்களை ரீல்ஸ் எடுக்கிறோம் என்ற பெயரில் தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.
யூடியூப் பிரபலம் சித்ரா கூறியதன் பேரில் கார்த்திக்கின் உறவினரான ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கீழபொட்டல்பட்டியை சேர்ந்த ஆனந்தராமன் (24) என்பவர் திவ்யா சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததை வீடியோ எடுத்து அனுப்பி உள்ளார். அந்த வீடியோவை வைத்து சித்ரா, கார்த்திக் மற்றும் திவ்யாவை மிரட்டியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த திவ்யா, உடந்தையாக இருந்த கார்த்திக், வீடியோ எடுக்க கூறிய சித்ரா, வீடியோ எடுத்த ஆனந்தராமன் ஆகிய 4 பேரை போக்சோ சட்டத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளோம்,” என்றனர்.