க்ரைம்

காரில் சென்ற பெண்களை துரத்திய ஈசிஆர் சம்பவத்தில் 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு - போலீஸ் சொல்வது என்ன?

பெ.ஜேம்ஸ் குமார்

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், காரில் சென்ற பெண்களை இளைஞர்கள் மற்றொரு காரில் துரத்திச் சென்ற சம்பவம் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து முறையாக விசாரித்து குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாம்பரம் நகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக காவல் துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த ஜன. 26-ம் தேதியன்று, கானத்தூரில் வசிக்கும் பெண் ஒருவர், கானத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார், அதில் ஜன.25-ம் தேதியன்று அதிகாலை 2 மணியளவில் முட்டுக்காடு பாலம் அருகே தனது காரில் வந்து கொண்டிருந்தபோது, ​​சுமார் 7-8 பேருடன் இரண்டு வாகனங்களில் வந்தவர்கள் திடீரென தன்னை வழிமறித்ததாக கூறியுள்ளார்.

இந்த வாகனங்களில் இருந்த நபர்கள், தன்னை வீடு வரை பின்தொடர்ந்து வந்தனர். அவர்களுடைய வாகனத்தின் மீது மோதிவிட்டு தான் நிற்காமல் சென்றுவிட்டதாக குற்றம் சாட்டினர். வீட்டுக்கு வந்ததும், தன்னைப் பின்தொடர்ந்து வாகனங்களில் வந்தவர்கள் தன்னுடன் விபத்து தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறும் விபத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், ஜன.26-ம் தேதியன்று கானத்தூர் காவல் நிலையத்தில் சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டது. மேலும் விசாரணையில், கானத்தூர் காவல் நிலையத்தில் பெண்கள் துன்புறுத்தல் சட்டத்தின், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவத்தில் ஈடுபட்ட வாகனத்தைக் கண்டுபிடிக்கவும், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யவும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சம்பவம் தொடர்பாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து முறையாக விசாரித்து குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

திமுக கொடி கட்டிய கார் - இதனிடையே, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் சென்ற காரை திமுக கொடி கட்டிய சொகுசு காரில் துரத்தி சென்று இளைஞர்கள் வழிமறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தபோது, சம்பந்தப்பட்டவர்கள் திமுகவினர் என்பதால் போலீஸார் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

அதற்குள் சமூக ஊடகங்களில் சம்பவம் வைரலானதால், புகாரின் பேரில் போலீஸார் சிஎஸ்ஆர் பதிவு செய்துள்ளனர். அதேநேரம், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், இதில் பாதிக்கப்பட்டவர்களும் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால், இரு தரப்பும் போலீஸார் முன்னிலையில் ரகசியமாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில், கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை காரில் துரத்திச் சென்று தொல்லை கொடுத்த திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

SCROLL FOR NEXT