க்ரைம்

சென்ட்ரலில் சிறுவன் கடத்தல்: ஆந்திராவை சேர்ந்த 5 பெண்கள் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 6 வயது சிறுவனை கடத்திய வழக்கில், ஆந்திராவைச் சேர்ந்த 5 பெண்களை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மெனால் உதினின் மனைவி சஹிராபேகம்.

இவர் வேலை தேடி, கடந்த 12-ம் தேதி இரண்டு மகன்களுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தபோது, இவரது மூத்த மகன் ஷாகிப் உதின் (6) திடீரென மாயமானார். இதுகுறித்து சென்ட்ரல் ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில், ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். தமிழக ரயில்வே போலீஸார் மற்றும் ஆர்.பி.எஃப் போலீஸார் இணைந்து, சிறுவனை தேடும் முயற்சியில் இறங்கினர். குறிப்பாக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், ஆந்திரா வழியாக வட மாநிலத்துக்கு புறப்பட்ட ரயிலில் சிறுவனை சில பெண்கள்அழைத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, தமிழக ரயில்வே போலீஸார் மற்றும் ஆர்பிஎஃப் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதற்கிடையில், சிறுவன் ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே நசரத்பேட்டையில் இருப்பதாக ரயில்வே போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், அங்கு விரைந்து சென்று சிறுவனை ரயில்வே போலீஸார் மீட்டு, சென்னைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து, சிறுவனை சஹிராபேகத்திடம் ஒப்படைத்தனர். மேலும், 2 பெண்களை கைது செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், சிறுவனை கடத்தி சென்றது தொடர்பாக, ஆந்திர மாநிலம் நசரத்பேட்டையை சேர்ந்த சரஸ்வதி (40),சஜ்ஜாவதி (30), ரெக்கனர் வீரஞ்சம்மா (48), ரெக்கனர் உமா (40), வனம்பட்டு அஞ்சனம்மா (32) ஆகியோரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT