சென்னை: இரண்டு குழந்தைகளின் கழுத்தை அறுத்து, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனாம்பேட்டை வெங்கடராமன் தெருவில் வசிப்பவர் சரவணன். இவர், வடபழனியில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி ஜெயந்தி(33). இருவரும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 8 வயதில் சனாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.
ஜெயந்திக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 2-வதாக பெண் குழந்தை சாரா பிறந்துள்ளது. அப்போதிருந்தே ஜெயந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கைக்குழந்தையை பராமரிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். அதன் காரணமாக மிகுந்த மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் அவரது கணவர் சரவணன் நேற்று காலை வேலைக்குச் சென்ற சிறிது நேரத்தில், குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு எதிர் வீட்டில் வசிப்பவர் ஓடிவந்துள்ளார். அப்போது, சிறுமி சனாஸ்ரீ அழுதபடி வந்து கதவை திறந்து வெளியே வந்துள்ளார்.
வீட்டின் உள்ளே ஜெயந்தி கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்சில் வந்த செவிலியர்கள், ஜெயந்தியின் உடலை பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினர்.
கழுத்தில் காயங்களுடன் இருந்த 2 குழந்தைகளும் எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து தேனாம்பேட்டை போலீஸார் விரைந்து சென்று ஜெயந்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘சில தினங்களாக குழந்தைகளை பராமரிப்பதில் ஜெயந்தி மிகுந்த மன அழுத்ததில் இருந்துள்ளார். இதையடுத்து, சரவணன் கடந்த 27-ம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள கிளினிக் ஒன்றுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை வீட்டு கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு, இரு குழந்தைகளின் கழுத்தையும் கத்தியால் அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
மேலும், குழந்தைகளை அறுத்த அதே கத்தியால் தன்னை அறுத்துக் கொண்டு, சிறிய தண்ணீர் டேங்கில் தலையை திணித்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்’’ என்றனர்.