சென்னை: சென்னையில் இருந்து விமானத்தில் சிங்கப்பூர் செல்ல வந்த சென்னை பயணியிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர்.
அப்போது, சுற்றுலா பயணியாக சிங்கப்பூர் செல்ல வந்த சென்னையை சேர்ந்த சங்கர் (40) என்பவரின் கைப்பையை சோதனை செய்த போது, ஜிபிஎஸ் கருவி இருந்தது. விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, விமான பயணிகள் ஜிபிஎஸ் கருவி எடுத்து செல்லக்கூடாது என்ற விதிமுறை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜிபிஎஸ் கருவி எடுத்து செல்ல தடை இருப்பது தனக்கு தெரியாது என்று பயணி தெரிவித்தார். அவரது விளக்கத்தை ஏற்று கொள்ளாத அதிகாரிகள், ஜிபிஎஸ் கருவையை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரது பயணத்தை ரத்து செய்து, அவரையும், ஜிபிஎஸ் கருவியையும் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.