பெங்களூரு: கர்நாடகாவின் ஹூப்பள்ளி மாவட்டம் நேதாஜி நகரை சேர்ந்தவர் பீட்டர் கொள்ளாப்பள்ளி (36). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பிங்கி ராபர்ட் (29) என்ற பெண்ணுக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில் பிங்கி ராபர்ட் விவாகரத்து கோரி, தன் கணவர் பீட்டருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில், தனக்கு ஜீவனாம்சமாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு ஹுப்பள்ளி குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் பீட்டர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன்பாக தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில், என் மனைவியின் தொல்லை தாங்க முடியாததால் இந்த முடிவை எடுத்தேன் என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். போலீஸார், பிங்கி மீது தற்கொலைக்கு தூண்டிய தாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.