சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் 14 நாட்களுக்கு பிறகு, ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே மீட்கப்பட்டார். இது தொடர்பாக, இரண்டு பெண்களை ரயில்வே போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மெனால் உதினின் மனைவி சஹிராபேகம். இவர் வேலை தேடி, கடந்த 12-ம் தேதி இரண்டு மகன்களுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து, பயணிகள் காத்திருப்போர் பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது, இவரது மூத்த மகன் ஷாகிப் உதின் (6) திடீரென மாயமானார்.
இதனால், அதிர்ச்சியடைந்த சஹிராபேகம், ரயில் நிலையத்தின் பல இடங்களில் தேடினார். இருப்பினும், சிறுவன் கிடைக்காததால், சென்ட்ரல் ரயில்வே போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்ததில், ஆந்திரா வழியாக வட மாநிலத்துக்கு புறப்பட்ட ரயிலில் சிறுவனை சில பெண்கள் அழைத்துச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, தமிழக ரயில்வே போலீஸார் மற்றும் ஆர்பிஎஃப் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். சிறுவனை சில பெண்கள் அழைத்து செல்வது தொடர்பாக, ரயில் செல்லும் வழித்தடத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும், அந்த நிலையங்களில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யவும் முயற்சி எடுத்தனர்.
இந்நிலையில், காணாமல் போன சிறுவன் ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே நசரத்பேட்டையில் இருப்பதாக ரயில்வே போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சென்ட்ரல் ரயில்வே தனிப்படை போலீஸார் விரைந்து சென்று சிறுவனை மீட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
தொடர்ந்து, சஹிராபேகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல் நிலையம் வந்த சஹிராபேகத்திடம் அவரது மகனை ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர். மேலும், சிறுவனை அழைத்து சென்றது தொடர்பாக சரஸ்வதி, சஜ்ஜாவதி ஆகிய இரண்டு பெண்களை ரயில்வே போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும் 3 பெண்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்களை அழைத்து விசாரணை நடத்த உள்ளதாகவும் ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.