க்ரைம்

கொச்சியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 2 பயணிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு

செய்திப்பிரிவு

சென்னை: கொச்சியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் 2 பயணிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 171 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த கேரளாவை சேர்ந்த டேவீஸ் (35) மற்றும் அமெரிக்காவை சேர்ந்த கஸன் எலியா (32) இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

விமான பணிப்பெண்கள் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தபோதும், இருவரும் தொடர்ந்து தாக்கி கொண்டு வெடிகுண்டு வீசி விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. விமான பணிப்பெண்கள் விமானிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

விமானம் சென்னை வந்ததும், பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் சென்று தாக்குதலில் ஈடுபட்ட இருவரிடமும் சோதனை செய்தனர். ஆனால், அவர்களிடம் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. இதையடுத்து, இரண்டு பயணிகளையும் விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இருவரிடமும் மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

SCROLL FOR NEXT