சென்னை: மாஜிஸ்திரேட் பெயரில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக எழும்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்தவர் பெர்னான்ட் ஷா. இவர் தொடர்பான வழக்கு ஒன்று எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அண்மையில், அவருக்கு எதிரான தீர்ப்பு வந்துள்ளது.
இதனால், அவர் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் எழும்பூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் மற்றொரு வழக்கு தொடர்பான விசாணை நடைபெற்றது.
அப்போது, அங்கு திடீரென நுழைந்த பெர்னான்ட் ஷா, நீதிபதியிடம் ‘வழக்கறிஞர் ஒருவரது பெயரை குறிப்பிட்டு, அந்த வழக்கறிஞர் எனது வழக்கை எனக்கு சாதகமாக முடித்து தருவதாக கூறி ரூ.50 ஆயிரம் பெற்றுக் கொண்டார்.
அந்த பணத்தில், மாஜிஸ்திரேட்டுக்கும் ஒரு பகுதி கொடுக்க வேண்டும் என கூறி என்னிடமிருந்து லஞ்சப் பணத்தை பெற்றுக் கொண்டார். அப்படி பணம் பெற்றும் எனக்கு எதிரான தீர்ப்பு வந்துள்ளது என ஆவேசமாக கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த, மாஜிஸ்திரேட் நீங்கள் சொல்வதை எப்படி நம்புவது என கேள்வி எழுப்பி உள்ளார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் பணம் கேட்டது தொடர்பாகவும், அதில் மாஜிஸ்திரேட்டுக்கு ஒரு பகுதியை கொடுக்க வேண்டும் என கூறுவதுபோல் இருந்த செல்போன் ஆடியோவை போட்டு காண்பித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாஜிஸ்திரேட், நேர்மையான என் பெயரிலேயே இவ்வாறு மோசடி நடந்துள்ளதா எனக் கூறி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, நீதிபதியின் உதவியாளர் இதுதொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.