சென்னை: பள்ளி சென்று திரும்பிய 3 வயது குழந்தையைக் கடத்திய வேலைக்கார பெண் மற்றும் அவரது நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை ஷெனாய் நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 3 வயது குழந்தை அப்பகுதி பள்ளி ஒன்றில் படித்து வந்தார். கடந்த 2019 ஜூலை 18-ம் தேதியன்று பள்ளி முடிந்து வேனில் வந்து இறங்கிய குழந்தையை, வேலைக்காரப் பெண்ணான அம்பிகா (25), அவரது நண்பர் கலிமுல்லா சேட் (30) என்பவரும் சேர்ந்து கடத்திச் சென்று ரூ.60 லட்சம் பணம் கேட்டு அந்த தம்பதியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமைந்தகரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து குழந்தையைத் தேடினர். அப்போது அந்த குழந்தை கேளம்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதை அறிந்து அங்கு சென்று இருவரையும் கைது செய்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
இந்த வழக்கு விசாரணை அல்லிக்குளத்தில் உள்ள சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி முன்பாக நடந்து வந்தது. அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் ஆரத்தி பாஸ்கரன் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் குழந்தையைக் கடத்திய குற்றத்துக்காக அம்பிகா மற்றும் கலிமுல்லா சேட் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.