மதுரை: உசிலம்பட்டி அருகே சிறுவனை காலில் விழ வைத்து கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகிலுள்ள சங்கம்பட்டி பார்வதி அம்மன் கோயில் தெருவில் வசிக்கும் 17 வயது பட்டியலின சிறுவன் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், கடந்த புரட்டாசி மாதம் நடந்த திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 16-ம் தேதி தங்களது ஊரைச் சேர்ந்த சிலர் ஆபாசமாக பேசி, சாதி பெயரை சொல்லி தன்னை திட்டினர். பிறகு அங்கிருந்த 6 வயது சிறுவன் உட்பட எல்லோர் கால்களிலும் விழ வைத்து கொலை மிரட்டல் விடுத்தனர், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இது தொடர்பாக 18-ம் தேதி உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகாரில் தெரிவித்ததாக கிஷோர், உக்கிரபாண்டி, மணிமுத்து உட்பட 6 பேர் மீது போலீஸார் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இருப்பினும், சிறுவன் மீது சிறுநீர் கழித்து அராஜகம் செய்ததாக சமூக வலைதளங்களில் வைரலான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், “காலில் விழவைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுவன் கொடுத்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட 6 பேர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சிறுவன் மீது சிறுநீர் கழித்து அராஜகம் செய்ததாக தவறான தகவல் பகிரப்படுகிறது. இது உண்மைக்கு புறம்பானது.” என்றனர்.