க்ரைம்

கர்நாடகாவில் 2 ஊழியர்களை சுட்டுக்கொன்ற ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு

இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பீதரில் உள்ள சிவாஜி சவுக்கில் 2 நாட்களுக்கு முன்பு எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்துக்கு பணம் நிரப்ப பாதுகாப்பு ஊழியர்கள் 2 பேர் வந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர், பாதுகாப்பு ஊழியர்கள் கண்ணில் மிளகாய் தூளை வீசி, துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பேரும் உயிரிழந்த நிலையில், ரூ.93 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பீதர் போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் பீதர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் குன்டே. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரகாந்த் பூஜாரி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். வங்கியின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா கூறுகையில், “ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பீதருக்கு அருகே தெலங்கானா மற்றும் மகாராஷ்டிர மாநில எல்லைகள் இருப்பதால் கொள்ளையர்கள் அங்கு தப்பிச் சென்றிருக்கலாம் என கருதுகிறோம். எனவே அந்த மாநிலங்களுக்கும் தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.

இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பணத்துக்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா? அல்லது வேறு காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

SCROLL FOR NEXT