சென்னை: சென்னை ஐஐடியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக தேநீர் கடையில் வேலை செய்யும் உத்தர பிரதேச இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பொறியியல் மாணவி ஒருவர் கடந்த டிசம்பர் 23ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், சென்னை ஐஐடி மாணவிக்கு இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: "சென்னை ஐஐடியில் படித்து வரும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார். பொங்கல் பண்டிகை நாளான கடந்த 14ம் தேதி மாலை 5.30 மணி அளவில், உடன் படிக்கும் தனது நண்பருடன் கோட்டூர்புரத்தில் உள்ள பேக்கரியுடன் இணைந்த தேநீர் கடைக்கு சென்றுள்ளார். அப்போது, அந்த கடையில் வேலை பார்க்கும் இளைஞர் ஒருவர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
தீவிர விசாரணை: இதுதொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி புகார் கொடுத்தார். இதையடுத்து, போலீஸார் விரைந்து சென்று, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீராம் (29) என்பது தெரியவந்தது. அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். உடனடியாக அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
ஐஐடி நிர்வாகம் விளக்கம்-இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐஐடி நிர்வாகம் நேற்று விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை ஐஐடி வளாகத்துக்கு வெளியே வேளச்சேரி - தரமணி சாலையில் உள்ள தேநீர் கடையில் ஆராய்ச்சி மாணவி ஒருவர் கடந்த ஜனவரி 14ம் தேதி மாலை 5.30 மணி அளவில் பாலியல் தொல்லைக்கு ஆளாகிஉள்ளார். அப்போது, அந்த மாணவியுடன் வந்த மாணவர்களும், அங்கிருந்த பொதுமக்கள் சிலரும் பாலியல் தொல்லை கொடுத்த நபரை பிடித்து, போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, போலீஸார் அங்கு வந்து, அந்த நபரை கைதுசெய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐஐடி நிர்வாகத்துக்கும் தகவல் அளித்தனர்.
எச்சரிக்கை தேவை: கைது செய்யப்பட்ட நபர், வெளியில் உள்ள பேக்கரி கடையில் வேலை பார்ப்பவர். அவருக்கும் ஐஐடி நிர்வாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஐஐடி வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வளாகத்தில் வசிக்கும் அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளியே செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாணவிகளுக்கு ஏற்கெனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஐஐடி நிர்வாகம் தொடர்ந்து செய்து வருகிறது. இவ்வாறு ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.