ராமேசுவரம்: ராமேசுவரத்தில் கொலை செய்யப்பட்ட மீனவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் தனுஷ்கோடி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராமேசுவரம் தெற்கு கரையூரில் நான்கு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கோயில் திருவிழாவில் இரண்டு பிரிவினருக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று இரவு, தெற்கு கரையூர் பூமாரியம்மன் கோயில் அருகே ஒரு பிரிவைச் சேர்ந்த நம்புக்குமார் (35), சேதுபதி, சத்ரியன், விஜி, சூர்ய பிரகாஷ் ஆகிய ஐந்து பேர் பேசிக்கொண்டிருந்த போது, மற்றொரு பிரிவைச் சேர்ந்த சொகேஸ்வரன், ஜீவித், கார்த்திகரன், ரஞ்சித்குமார், கருணாகரன், ஐயன்சங்கரன் குமார், செல்வராஜ் உள்ளிட்ட 11 பேர் கும்பலாக வந்து நான்கு பேர் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் மீனவர் நம்புக்குமார் என்பவர் கத்தியால் தலை, முதுகு உள்ளிட்ட இடங்களில் குத்தப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், சேதுபதி, சத்ரியன், விஜி ஆகியோர் காயம் அடைந்து ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை ராமேசுவரம் அரசு மருத்துவமனை அருகே தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கொலை செய்யப்பட்ட நம்புக்குமாரை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம், ராமேசுவரம் சரக கண்காணிப்பாளர் சாந்தமூர்த்தி குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
தொடர்ந்து போலீஸார் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக சொகேஸ்வரன், ஜீவித், கார்த்திகரன், ரஞ்சித்குமார், கருணாகரன், ஐயன்சங்கரன் குமார், செல்வராஜ் ஆகிய 7 பேரை கைது செய்துள்ளனர். மேலும் சதிஷ்குமார், சூர்யா, நம்புசேகரன், அஸ்வின் ஆகிய நான்கு பேர்களை போலீஸார் தனிப்படை மூலம் தேடி வருகின்றார்கள்.