க்ரைம்

சென்னை | கனடாவில் வேலை: 53 பேரிடம் ரூ.41 லட்சம் பெற்றதாக மோசடி புகார்

செய்திப்பிரிவு

சென்னை: கனடாவில் வேலை பெற்றுத் தருவதாக ரூ.53 பேரிடம் ரூ.41 லட்சம் பெற்று மோசடி செய்யப்பட்டதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முஹமது அலி (29). டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: டிப்ளமோ ஹார்ட்வேர் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். குடும்ப சூழ்நிலையால் வெளிநாடு செல்ல முடிவெடுத்தேன்.

அப்போது, மலேசியாவில் வேலை செய்து வரும் எனது தம்பி மூலம் யாஸ்மின் பின்தீ என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவர் கனடாவில் ரெஸ்டாரென்ட் மற்றும் சூப்பர் மார்க்கெட் தொடங்கப்போவதாகவும், அதற்கு ஆட்கள் தேவை என்றும் தெரிவித்தார். இதையடுத்து, அங்கு வேலை செய்ய ஒப்புக் கொண்டேன்.

விசாவுக்கு ரூ.2 லட்சம் ஆகும் என்றார். என்னிடம் ரூ.1 லட்சம் மட்டுமே உள்ளது; மீதம் உள்ள பணத்தை வேலை செய்து கழித்துவிடுகிறேன் என தெரிவித்தேன். அதற்கு சம்மதம் தெரிவித்த அவர், அவரது நண்பர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது ஹாரிஷ் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பச் சொன்னார்.

அதன்படி ரூ.1 லட்சம் அனுப்பி வைத்தேன். மேலும், பலர் வேலைக்கு தேவைப்படுவதாக, அப்படி ஆட்களை அழைத்து வந்தால் எனக்கு மேலாளர் வேலை தருவதாக உறுதி அளித்தார். இதை நம்பி நான் 53 பேரிடமிருந்து ரூ.41 லட்சத்து 15,500 வசூலித்து கொடுத்தேன்.

ஆனால், உறுதியளித்தபடி யாருக்கும் வேலை தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. கேட்டால் மிரட்டுகின்றனர். எனவே, பணம் பெற்று மோசடி செய்த யாஸ்மின் பின்தீ, அவரது கூட்டாளிகள் முகமது ஹரிஷ், ஆரோக்கியராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த திருவண்ணாமலை எஸ்.பி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT