கோவிந்தம்மாள், தமிழரசி 
க்ரைம்

சென்னை | மலேசியாவில் உள்ள நிறுவனத்துக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்வதாக ரூ.10.60 கோடி மோசடி: தாய், மகள் கைது

செய்திப்பிரிவு

சென்னை: மலேசியாவில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்வதாக கூறி ரூ.10.60 கோடி மோசடி செய்ததாக தாய், மகள் கைது செய்யப்பட்டனர்.

மலேசியா நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், ‘சென்னை வளசரவாக்கம் பிரகாசம் சாலையைச் சேர்ந்த தமிழரசி (42), மதுரவாயல் கடம்பாடியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அவரது தாய் கோவித்தம்மாள் (62) ஆகியோர் வளசரவாக்கத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் மலேசியாவில் உள்ள எனது நிறுவனத்துக்கு 12 ஆயிரம் மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்வதாக கூறி ரூ.10.61 கோடி வரை வங்கி மூலமாக பெற்றுக் கொண்டனர். ஆனால், உறுதி அளித்தபடி சர்க்கரை அனுப்பி வைக்காமல், சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டதாக போலி ஆவணங்களை அனுப்பி ஏமாற்றினர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரில் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்த ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் சிவா, காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், புகாருக்கு உள்ளான தமிழரசி இதேபோன்று மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை இதே பாணியில் ரூ.75 லட்சம் வரை ஏமாற்றி விட்டு தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.இதையடுத்து, தலைமறைவாக இருந்த தமிழரசி, அவரது தாய் கோவிந்தம்மாள் ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT