சென்னை: சென்னையில் கடந்த ஆண்டில் 325 நிதி மோசடி புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 36 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் கடந்த 2024-ம் ஆண்டில் நிதி மோசடி தொடர்பாக மத்திய குற்றப்பிரிவில் 2,732 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த புகார்கள் அனைத்தும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் பதிவு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்கும் நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டனர்.
அந்தவகையில், இதில், 325 புகார்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து, வழக்கில் தொடர்புடைய 36 பேரைக் கைது செய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்பாக 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நிதி மோசடி புகார்களில் சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தும் போலி வங்கி கணக்குகளில் இருந்து ரூ.36.63 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது. ரூ.12.31 கோடி பணம் பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்களினால் பாதிக்கப்படுபவர்கள் ‘1930’ எண்ணைத் தொடர்பு கொண்டோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.