க்ரைம்

பிஹாரில் குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் தருவதாக மோசடி

செய்திப்பிரிவு

பாட்னா: குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 3 பேரை பிஹார் போலீஸார் கைது செய்துள்ளனர்.

பிஹாரின் நவாடா மாவட்டம் ககுவாரா என்ற கிராமத்தில் இருந்து ஒரு கும்பல் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது. வேலைவாய்ப்பு என்ற பெயரில் இக்கும்பல் முகநூலில் கவர்ச்சிகரமான விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் தரப்படும். ஒருவேளை அந்த பெண்கள் கர்ப்பமாகாவிட்டாலும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பணம் கிடைக்கும் என இவர்கள் ஆசை காட்டியுள்ளனர்.

இதை நம்பி இவர்களை தொடர்புகொள்ளும் ஆண்களிடம் பான் கார்டு, ஆதார் கார்டு, செல்பி புகைப்படம் போன்றவற்றை கேட்டுப் பெற்றுள்ளனர். பிறகு பெயர் பதிவு, ஓட்டல் அறை கட்டணம் என்ற பெயரில் இவர்களிடம் பணம் வசூலித்துள்ளனர். மேலும் புகைப்படங்களை வைத்து மிரட்டியும் பணம் பறித்துள்ளனர்.

இதுகுறித்து டிஎஸ்பி இம்ரான் பர்வேஸ் கூறுகையில், “கைது செய்யப்பட்ட மூவரும் பிரின்ஸ் ராஜ், போலா குமார், ராகுல் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்த 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து வாட்ஸ் அப் உரையாடல், வாடிக்கையாளர்களின் புகைப்படங்கள், ஆடியோ பதிவுகள், வங்கிப் பரிவர்த்தனை போன்ற விவரங்களை திரட்டியுள்ளோம்" என்றார்.

SCROLL FOR NEXT