மதுரை: நடிகை கவுதமியிடம் நிலம் வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் அழகப்பன் 3-வது முறையாக தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நடிகை கவுதமி தன்னிடம் நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி வாங்கி மோசடி செய்ததாக அழகப்பன் உட்பட பலர் மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் அழகப்பன் உட்பட 6 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அழகப்பன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இரு முறை முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 3-வது முறையாக முன்ஜாமீன் கோரி அழப்பன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். போலீஸ் தரப்பில், விசாரணை முடியவில்லை. முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும் எனக் கூறப்பட்டது. இதையேற்று அழகப்பன் முன்ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.