க்ரைம்

திருக்கோவிலூரில் ஒப்பந்த பணி எடுப்பதில் திமுகவினரிடையே மோதல்: 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

திருக்கோவிலூரில் ஒப்பந்தப் பணி எடுப்பதில் திமுகவைச் சேர்ந்த இரு கோஷ்டியினரிடையே மோதல் ஏற்பட்டதில் 8 பேர் காயமடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி 15, 16-வது வார்டுகளுக்கும் பொதுவாக உள்ள பூங்கா ஒன்றைச் சுற்றி சுற்றுச் சுவர் அமைப்பதற்காக ரூ.4.5 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தம் கோரப்பட்டது. இந்த ஒப்பந்தப் பணியை எடுப்பது தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த 15-வது வார்டு உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் 16-வது வார்டு உறுப்பினர் ஷண்முகவள்ளியின் கணவர் ஜெகன் ஆகியோரிடையே போட்டி நிலவியது.

இந்நிலையில், திருக்கோவிலூரில் ஐந்து முனை சந்திப்பு அருகே நேற்று முன்தினம் இரவு இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. தகவலறிந்து திருக்கோவிலூர் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் வந்த போலாஸார், மோதலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த மோதலில் காயமடைந்த திமுக பிரமுகர்கள் ஜெகன் (44), சங்கர்நாத் (45), கோகுல்(28), பிரேம் (25), அண்ணாதுரை (53), பாரதி (48), வீரவேல்(45) மற்றும் திமுக பிரமுகர் ஒருவரின் 17 வயது மகன் ஆகியோர் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க டிஎஸ்பி தலைமையில் மருத்துவமனையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரிடையே போலீஸார் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT