மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் சென்ற கார் மீது ரவுடி வரிச்சூர் செல்வத்தின் கார் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா. இவர் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களை நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு முடிந்ததும் ஆட்சியர் சங்கீதா அவரது காரில் மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அவரது கார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அருகே வரும் வந்து கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த மற்றொரு கார் ஆட்சியரின் கார் மீது மோதியது. இதில் ஆட்சியரின் காரின் பின்பகுதியில் சேலசான சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டு ஆட்சியர் சங்கீதா உயிர் தப்பினார்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் போலீஸில் ஆட்சியர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் ஆட்சியர் கார் மீது மோதிய கார் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வரிச்சூர் செல்வத்துக்கு சொந்தமானது என்றும், அந்த காரை வரிச்சூர் செல்வத்தின் மகன் நளன் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வரிச்சூர் செல்வத்தின் காரை பறிமுதல் செய்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
ஆட்சியரின் கார் மீது வரிச்சூர் செல்வம் கார் மோதிய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில், மாவட்ட ஆட்சியரின் கார் மீது மோதிய வரிச்சியூர் செல்வம் மகன் காரை கைப்பற்றியுள்ளோம். இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து நளன் ஆட்சியரிடம் மன்னிப்பு கேட்க சென்றுள்ளார். ஆனாலும், ஆட்சியர் தரப்பு அளிக்கும் புகாரை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.