க்ரைம்

அதிமுக உள்கட்சி மோதல்: கைத்துப்பாக்கியால் சுட்ட அதிமுக நிர்வாகிக்கு ஜாமீன்

கி.மகாராஜன்

மதுரை: அதிமுக உள்கட்சி மோதல் காரணமாக கைத்துப்பாக்கியால் சுட்ட அதிமுக ஐடி பிரிவு நிர்வாகிக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

விருதுநகர் மாவட்டம் கல்விமடையை சேர்ந்தவர் கே.சி.பிரபாத். அதிமுக மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொருளாளராக உள்ளார். இவர் அதிமுக வாட்ஸ்அப் குழு ஒன்றில் வந்த தகவலை பிற குழுவில் பகிர்ந்துள்ளார். இந்த தகவலை பார்த்ததும் அதிமுகவைச் சேர்ந்த அதிமுக ஒன்றிய செயலாளர் கச்சனேந்தல் சந்திரன் என்பவர் மற்றும் சிலர் பிரபாத் வீட்டுக்கு வந்து அவருடன் தகராறில் ஈடுபட்டு பிரபாத் மற்றும் அவரது மகன் மிதுன் சக்கரவர்த்தியை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து தற்காப்புக்காக பிரபாத் தான் வைத்திருந்த துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டுள்ளார். பின்னர் தகராறு செய்தவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். பிரபாத்தும், அவரது மகனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் துப்பாக்கியால் சுட்டதற்காக பிரபாத் மீது அ.முக்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு பிரபாத், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் மாரீஸ்குமார் வாதிடுகையில், மனுதாரர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையில் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். நீதித்துறை நடுவர் மருத்துவமனைக்கு நேரில் சென்று மனுதாரரை காவலில் வைக்க போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே, முன்ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவாக மாற்றி ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.

பின்னர் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, மனுதாரர் தொடர்ந்து சிகிச்சையில் இருக்க வேண்டியுள்ளது. வழக்கு விசாரணையும் நிலுவையில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அவரது முன்ஜாமீன் மனு ஜாமீன் மனுவாக ஏற்கப்பட்டு மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரரின் மகன் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதனால் அவரை கைது செய்யத் தேவையில்லை, என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT