க்ரைம்

நெல்லையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 35 பேர் காயம்

அ.அருள்தாசன்

நெல்லை: நெல்லையில் ஆம்னி பேருந்து திடீரென நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். 35 பேர் காயமடைந்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட ஆம்னி பேருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 37 பேர் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது

இந்நிலையில், இந்த பேருந்து இன்று (ஜன.8) காலையில் பாளையங்கோட்டை டக்கம்மாள்புரம் ஐஆர்டி பாலிடெக்னிக் அருகே வரும்போது திடீரென நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை தீயணைப்பு படை நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் அங்கே இருந்த படுகாயம் அடைந்த 35 பேரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பேருந்தில் பயணம் செய்த நெல்லை மாவட்டம் கூட்டப்புளியைச் சேர்ந்த பிரிஸ்கோ என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் பேருந்தின் ஓட்டுநர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் முதல் கட்டமாக பேருந்தின் ஓட்டுநர் திடீரென தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பெருமாள்புரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

SCROLL FOR NEXT