க்ரைம்

கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி படுகொலை: எதிர் தரப்பினர் வீட்டுக்கு தீவைப்பு

செய்திப்பிரிவு

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி கடலூரில் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது எதிர்தரப்பினர் வீட்டுக்கு தீவைக்கப்பட்டது.

கடலூர் முதுநகர் சான்றோர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் சங்கர் (37). இவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகியாக உள்ளார். நேற்றுமுன்தினம் நள்ளிரவு சங்கர், அவரது வீட்டின் அருகே நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் கக்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருவர் வந்துள்ளனர்.

இதைக்கண்ட சங்கர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். ஆனால், அவர்கள் சங்கரை சுற்றி வளைத்து, கத்தியால் குத்தியனர். இதில் பலத்த காயமடைந்த சங்கர், அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, அவரைக் கொலை செய்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

தகவலறிந்து வந்த கடலூர் முதுநகர் போலீஸார் சங்கரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: சில மாதங்களுக்கு முன்பு சங்கர் தரப்பினருக்கும், சான்றோர்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் சம்பந்தப்பட்ட சங்கர் தலைமறைவாக இருந்துள்ளார்.

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கர் மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதை நோட்டமிட்ட சதீஷ் தரப்பினர், அவரை கொலை செய்திருக்கிருக்கலாம் என்று தெரிகிறது. எனினும், முழு விசாரணைக்குப் பிறகே, குற்றவாளிகள் யார் என்பது தெரியவரும். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு சதீஷ் வீட்டுக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துள்ளனர். இதில் வீட்டிலிருந்த பொருட்கள் தீக்கிரையாகின. மேலும், வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் தீவைத்து எரித்துள்ளனர். தீயணைப்புத் துறை வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்துள்ளனர். கொலைக் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT