ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இரவில் தனியாகச் சென்ற பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், டிச. 29-ம் தேதி இரவு 8.30 மணியளவில் ஆட்டோவில் சென்றார். பின்னர் இயற்கை உபாதையைக் கழிக்கச்சென்றபோது அப்பகுதி யில் நின்ற 4 இளைஞர்கள் அப்பெண்ணைத் தாக்கியதோடு அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுகுறித்து அப்பெண் டிச.30-ம் தேதி ராமநாதபுரம் நகர் போலீஸில் புகார் அளித்தார். அன்றைய தினம் போலீஸார் விசாரணை செய்துவிட்டு அந்த இளைஞர்களை அனுப்பி விட்டனர். நேற்று முன்தினம் காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், உதவிக் கண்காணிப்பாளர் சிவராமன் ஆகியோர் தொடர் விசாரணை செய்தனர். விசாரணையில் புத்தேந்தல் கிராமத்தைச் சேர்ந்த புவனேஷ் குமார்(27), சரண்முருகன் (27), செல்வகுமார்(27), குட்டி என்ற முனீஷ் கண்ணன் (26) ஆகியோர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து புவனேஷ்குமார் உள்ளிட்ட 4 பேர் மீதும் பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உட்பட 8 பிரிவுகளில் வழக்குப் பதிந்து நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர் பரமக்குடி நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தி, ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.