லக்னோ: புத்தாண்டு தினமான இன்று, உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் குடும்பத் தகராறு காரணமாக இளைஞர் ஒருவர், தாய் மற்றும் நான்கு சகோதரிகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இக்கொலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அர்ஷத் (24) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய லக்னோ மத்திய பகுதி துணை காவல் ஆணையர் (டிசிபி) ரவீணா தியாகி, "லக்னோவில் உள்ள நாகா பகுதியிலிருக்கும் ஷராஞ்சித் ஹோட்டலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கொலைக்குற்றவாளி அர்ஷத் என்பது தெரியவந்துள்ளது. அவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை கொலை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து உள்ளூர் போலீஸார் குற்றாவளியைக் கைது செய்தனர்.
உயிரிழந்தவர்கள் அர்ஷத்தின் தாய் அஸ்மா, மற்றும் 9, 16,18, 19 வயது சகோதரிகள் என்று தெரியவந்திருக்கிறது. அர்ஷத் ஆக்ராவைச் சேர்ந்தவர். குடும்பத் தகராறு காரணமாக அவர் இந்த வெறிச்செயலைச் செய்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றம் நடந்த இடத்தில் தடயவியல் குழு ஆதாரங்களை சேகரித்து வருகின்றன" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சி செய்தித் தொடர்பாளர், "ஒரு குடும்பமே இப்போது இல்லை என்பது வருத்தமளிக்கிறது. வேலையின்மை, அழுத்தம், வறுமை போன்றவை இந்த கொலைக்கான பின்னணிக் காரணங்களாக இருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு எங்கள் கட்சி துணை நிற்கிறது" என்று தெரிவித்தார்.