சென்னை: சென்ட்ரல் வங்கியில் ரூ. 25 கோடி மோசடி செய்த வழக்கில் 5 பேருக்கு 7 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை முகப்பேரில் உள்ள சென்ட்ரல் வங்கியில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக வங்கி பொது மேலாளர் கடந்த 2009-ம் ஆண்டு சிபிஐ-யில் புகார் அளித்தார். அதன்படி, சிபிஐ நடத்திய விசாரணையில் தனியார் கட்டுமான நிறுவனத்தின் பெயரில் டி.வி.கிருஷ்ணா ராவ் உள்ளி்ட்ட பலர் கூட்டு சேர்ந்து ரூ.25 கோடியை முறைகேடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் பரிமாற்றம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து, போலியாக ஆவணங்கள் தயாரித்து நிதி மோசடியில் ஈடுபட்டதாக கிருஷ்ணா ராவ், ரவிசங்கர், ஹரி, சுக்ராகுமார், பத்மநாபன் உள்பட 13 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள 11-வது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி டி.பி.வடிவேலு முன்பாக நடந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் கிருஷ்ணா ராவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 4 லட்சம் அபராதமும், ஹரி, ரவிசங்கர், சுக்ராகுமார் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 20 ஆயிரம் அபராதமும், பத்மநாபனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.