மதுரை: மதுரை புதூர் பகுதியில் தனியார் மருத்துவமனையில் இன்று (டிச.31) காலை தீ விபத்து ஏற்பட்டது. தீ உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை புதூரில் உள்ள தனியார் மருத்துவமனை மூன்றாவது மாடியில் திடீரென கரும்புகை வெளியேறுவதை அறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தல்லாகுளம் தீயணைப்பு துறை அலுவலர் அசோக்குமார் தலைமையில் 10 மேற்பட்ட வீரர்கள் சம்பவ இட த்திற்கு விரைந்து சென்றனர். மூன்றாவது மாடியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
ஏற்கனவே இக்கட்டத்தில் தரைத்தளத்தில் மருத்துவமனை செயல்பட்டு வந்துள்ளது தற்போது இம்மருத்துவமனை பைபாஸ் ரோடு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது, ஆனாலும் அவ்வப்போது உள்நோயாளிகள் பிரிவு செயல்பட்டதாக கூறப்படுகிறது. இம் மருத்துவமனையை சேர்ந்த செவிலியர்கள் சிலர் அங்கு தங்கி இருந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் மூன்றாவது மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. யாருக்கும் காயம் இல்லை என்றாலும் அங்கு வைக்கப்பட்டிருந்த கட்டில், மெத்தைகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸாரின் விசாரணையில் தெரிகிறது. இருப்பினும் காரணம் குறித்து தொடர்ந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
ஏற்கெனவே திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் மதுரையிலும் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.